×

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம்: வழக்குகளை ரத்து செய்ய கோரிய சி.வி.சண்முகத்தின் மனுக்கள் தள்ளுபடி.! சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களின்போது தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது.

இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜனவரி 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி முதல்வரை தாக்கியோ, நேரடியாகவோ பேசவில்லை. தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததார். தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப்பெறும்போது, தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும். அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என்று சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசையும் முதல்வரையும் விமர்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் நேரடியாக தாக்கி பேசிவிட்டு தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கஞ்சா, 12 மணி நேர வேலை தொடர்பாக முதல்வரையும், அரசையும் அவதூறாக பேசியது தொடர்பான 2 அவதூறு வழக்குகளை எதிர்த்து சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தொழிலாளர் சட்டம், மோசடி என்று முதல்வருக்கு எதிராக பேசியது தொடர்பாக சி.வி.சண்முகம் மீது தமிழக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post முதல்வர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம்: வழக்குகளை ரத்து செய்ய கோரிய சி.வி.சண்முகத்தின் மனுக்கள் தள்ளுபடி.! சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,CV Shanmugam ,Chennai High Court ,Chennai ,AIADMK ,Rajya Sabha ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்